நிக்காலோ மானுச்சி- Niccolò Manucci


நிக்காலோ மானுச்சி- Niccolò Manucci

           மெட்ராஸ் நகரில் குடியேறிய ஆங்கிலேயர்களில் சிலர் தமிழ்மொழிமீது பற்று கொண்டு தமிழறிஞர்களாக மாறிய கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், இத்தாலியில் இருந்து இந்த மண்ணிற்கு வந்த ஒரு மனிதர் “சிறந்த சித்த வைத்தியர்“ எனப் பேர் எடுத்த கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தப் புகழ்பெற்ற சித்த வைத்தியர் தான் நிக்காலோ மானுச்சி.

இத்தாலியின் பிரபல வெனீஸ் நகரில் 1638இல் பிறந்த நிக்காலோ மானுச்சி, தனது14-ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு ஆங்கிலேயருக்கு உதவியாளனாக ஆசியா செல்லும் கப்பலில் ஏறினார் மானுச்சி. பல நாடுகளை சுற்றிக் கொண்டு கப்பல் இந்தியா வந்தடைவதற்குள் அவரது முதலாளி பரலோகம் சென்றடைந்துவிட்டார். மானுக்சிக்கு பிழைக்க வழி தெரியவில்லை.

     அப்போது இந்தியாவில் ஷாஜஹானின் மகன்கள் தாரா சிக்கோவுக்கும், அவுரங்கசீப்புக்கும் இடையில் அரியணைக்காள அடிதடி அரங்கேறிக் கொண்டிருந்த்து. இரதரப்பும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பயன்படுத்தி ராராவின் படையில் துப்பாக்கி வீரனாக சேர்ந்துகொண்டார் மானுச்சி.

        ஆனால், இறுதியில் அவுரங்கசீப் வெற்றி பெற்றதால், துப்பாக்கியை தூக்கி தூர வைத்துவிட்டு, மருந்துப் பெட்டியை கையில் எடுத்துக்கொண்டார் மானுச்சி. இதை வைத்து அவர் ஏதோ பெரிய மருத்துவர் என்று நினைத்துவிடாதீர்கள். அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வந்த பலர் மருத்துவர்களாக இருந்த்தால் ஐரோப்பியர்கள் எல்லோருக்கும் மருத்துவம் தெரியும் என்று நம் மக்கள் நம்பினார்கள். விளைவு, போலி மருத்துவர்கள் பட்டியலில் மானுச்சியும் சேர்ந்து கொண்டார். போலி மருத்துவராக தொடங்கினாலும் தனது ஆர்வத்தினாலும், அயராத உழைப்பினாலும் மருத்துவத்தை வேகமாக கற்றுக் கொண்டார் மானுச்சி. இவர் கற்றுக் கொள்ள எத்தனை பேரை காவு கொடுத்தார் என்ற தகவல் கிடைக்கவில்லை. எப்படியோ 1670 முதல் 1678வரை லாகூரில் சிற்நத மருத்துவர் எனப் பெயர் எடுத்து விட்டார். ஐரோப்பிய மருத்துவம் மட்டுமின்றி முகலாய பாணி மருத்துவத்தையும் சேர்த்து பார்த்த்தே இதற்கு முக்கிய காரணம்.

      பின்னர் அவுரங்கசீப்பின் தக்காண ஆளுநர் ஷா ஆலமின் அரசவையில் சிறிது காலம் பணியாற்றினார். ஆனால், 1686இல் ஷாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி பிரெஞ்சுப் படைகள் வசமிருந்த புதுச்சேரிக்கு வந்தார். காரணம் அப்போதைய பிரெஞ்சு ஆளுநர் பிரான்கோய்ஸ் மார்ட்டின் இவரின் நண்பர். அவரிடம் தாம் ஐரோப்பா திரும்பப்போவதாக சொன்னார் மானுச்சி. அப்போதுதான் அவரது வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

       இதற்குள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் கழித்திருந்தார் மானுச்சி. இவர் பயங்கர சாப்பாட்டுப் பிரியர் வேறு. எனவே, இந்திய உணவுகளை செம பிடி பிடித்து நாக்குக்கு இந்திய சுவையை ஏற்றியிருந்தார். இதெல்லாம் அவரது நண்பர் மார்ட்டினுக்குத் தெரியும். எனவே, இனிமேல் ஐரோப்பா சென்று உன்னார் வாழ முடியாது நண்பா, பேசாம இங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடு என்று யோசனை சொன்னார். அதோடு நிற்காமல் ஒரு பெண்ணையும் பார்த்துக்கொடுத்தார்.

        எலிசபெத் கிளார்க் என்ற அந்தப் பெண் ஒரு விதவை. மெட்ராசின் கருப்பர் நகரத்தில் பிராட்வேயில் தனது ஆங்கிலேய கணவர் விட்டுச் சென்ற ஒரு பெரிய தோட்ட வீட்டில் வசித்துக் கெண்டிருந்தார். மானுச்சி எலிசபெத்தை மணந்து கொண்டு, அந்த தோட்ட வீட்டிற்கு உரிமையாளராகிவிட்டார். இப்படித்தான் மெட்ராஸ் மாப்பிள்ளை ஆனார் மானுச்சி.

          பின்னர் மானுச்சி பரங்கி மலை அடிவாரத்தில் ஒரு தோட்ட வீட்டிற்கு குடிபோனார். இந்த வீட்டில் இருந்தபடிதான் அவர் தனது புகழ்பெற்ற Storia Do Mogor (முகலாயர்களின் சரித்திரம்) என்ற புத்தகத்தை எழுதினார். ஐந்து தொகுதிகளைக் கொண்ட இந்தப் புத்தகம் அன்றைய முகலாய ஆட்சி எப்படி நடைபெற்றது என்பதை அறிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது. தான் நேரில் பார்த்ததை மட்டுமே இந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதாக மானுச்சி சொல்கிறார். ஆனால் ஷாஜகானுக்கு முன் இருந்த முகலாய பேரரசர்கள் பற்றிய மானுச்சியின் தகவல்களில் நிறைய பிழைகள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

       மெட்ராசில் வசித்த போது மானுச்சிக்கு ஒரு மகன் பிறந்தான். ஆனால், அவன் இளம் வயதிலேயே இறந்துவிட்டான். அவரது மனைவி எலிசபெத்தும் 1706ஆம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார். இதனால், மனமுடைந்துபோன மானுச்சி, மெட்ராசில் இருந்து புறப்பட்டு மீண்டும் புதுச்சேரிக்கே சென்றுவிட்டார். தனது இறுதிக் காலம் வரை அவர் அங்கேயே தங்கி இருந்தார். இதனிடையே மானுச்சி அன்றைய முகலாய மற்றும் ஐரோப்பிய ஆட்சியார்களுக்கு இடையே பல முறை தூதுவராக செயல்பட்டார்.

     ஆட்சியார்களுக்கு இடையிலான பல பிணக்குகள் இவரது தலையீட்டால் சரி செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், பல போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இவர் இந்தியா பாணியில் உடை அணிந்ததாலும், பெர்ஷியா, பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல மொழிகள் தெரிந்தவராக இருந்ததாலும் இரு தரப்பினரும் இவரைத் தங்களுக்கு நெருக்கமானவராக நினைத்தனர். மேலும் மக்கள் மத்தியில் இருந்த நல்ல பெயரும் இவரை ஒரு மரியாதைக்கு உரிய மனிதராக கருத வைத்தது.

     இவ்வாறு அரசியல் தூதல், சித்த வைத்தியர் என மானுச்சி பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், 17, 18ஆம் நூற்றாண்டு இந்தியாவை அறிந்துகொள்ள உதவும் பல பயனுள்ள குறிப்புகளை அளித்த வரலாற்று ஆசிரியராகவே உலகம் அவரைப் பார்க்கிறது. இந்த உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்முன்னூறு ஆண்டுகளுக்கு முன் உலவிய பிராட்வேயும், பரங்கி மலையும் இன்றும் அவரது நினைவுகளை அமைதியாக அசைபோடுகின்றன.
நன்றி: தினத்தந்தி


Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)