பாரதி பாரதிதாசன்: மொழி வழித் தேசியம்

ஏ. எழில்வசந்தன்
இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இருபெரும் மகாகவிகள் பாரதியும் பாரதிதாசனும் ஆவர். பாரதி தேச விடுதலைக்கான உரத்தினை தன் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தி தன்னை தேசியக் கவியாக வெளிப்படுத்திக் கொண்டார். பாரதிதாசனோ எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனத் தன்னை முழுக்க முழுக்க தமிழ் இனக் கவிஞனாக வெளிப்படுத்திக் கொண்டார். இருப்பினும் பாரதியும் தமிழைப் பற்றிப் பாடியுள்ளார், அதேபோலப் பாரதிதாசனும் தேசவிடுதலை வேண்டிப் பாடியுள்ளார். இவ்விருவரையும் ஒருமித்து நோக்குகையில் மொழி என்ற அளவில் இனம் சார்ந்த நிலையில் ஒத்த கருத்துடையவர்களாகவும் தேசியம் சார்ந்த நிலையில் மாறுபட்டக் கருத்துடையவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் மொழி என்பது தேச ஒற்றுமைக்கும் தேசிய விடுதலைக்கும் எவ்விதம் உறுதுணையாக அமையும் என்பதனை இருவரும் வேவ்வேறு நிலைகளில் நின்று தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்துள்ளனர்.பாரதியும் பாரதிதாசனும் ஒப்புமைகள்பாரதியையும் பாரதிதாசனையும் பிறப்பு முதல் ஆய்வோமானால் பல ஒப்புமைகள் காணக்கிடக்கின்றன. பாரதி தனது ஆசிரியர் பணியைத் தாற்காலிகமாகத் செய்தார். பாரதிதாசனோ தம் வாழ்க்கையைத் தமிழ் ஆசிரியராகவே தொடங்கியவர். பாரதி பத்திரிகை ஆசிரியராக இருந்து பின் சொந்தமாகப் பத்திரிகைகளை ஆரம்பித்து நடத்தினார். அதுபோலவே பாரதிதாசனும் பத்திரிகை ஆசிரியராக இருந்து பின்னர் சொந்தமாகப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். இந்த இருவருடைய படைப்புகளும் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றன. இருவருடைய படைப்புகளும் அவர்கள் காலத்திற்குப் பின் தேசப் பொதுவுடைமை ஆயின. இப்படியாக இவ்விருவரின் ஒப்புமைகளையும் அடுக்கிக் கொண்டே செல்லலாம். இக்கூற்றுகளின் வழி இக்கட்டுரை பாரதி பாரதிதாசன் ஆகிய இருவரின் மொழிபற்றிய கருத்துகளையும் அதன் வழித் தேசிய விடுதலைக்கான ஊற்றுகளையும் எடுத்தியம்புவதாக அமையும்.
பாரதி பாரதிதாசன் : மொழிவழித் தேசியம்
பாரதி தன்னை தேசிய விடுதலைக் கவியாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய கருத்தியலில் பாரதியின் சொற்கோப்பு மகத்தானது. தமிழ் மொழியின் வழி உலகத்தோடு போட்டியிட முடியாது எனும் கருத்துக்கு மாற்றாக,
தமிழா, பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய் (1997:154) என்கிறார்.


பாரதிதாசனே இதே கருத்தை தன்னுடைய கவிநடையில்,
எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லி தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோமில்லை தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர் (1993:83)என்கிறார்.
தமிழ் மொழியின் மீது இருவருக்கும் இருந்த உணர்வும், உயர்வும் ஒன்றாகவே வெளிப்படுகிறது. பாரதி எத்தனையோ மொழிகள் அறிந்திருப்பினும் தமிழைப் பற்றிய தன்னுடைய உணர்வினை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
என்று கூற, பாரதிதாசனோ,
இனிமைத் தமிழ்மொழி எமது
எமக் கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது (1983:82)
என்று தமிழைத் தனக்குக் கிடைத்திட்ட அரிய அமுதமாகப் பார்க்கிறார்.இந்தியா முழுவதும் பொதுவில் ஒரு தேசிய மொழியைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திய பாரதி, அதே சமயம் சுதேச பாஷைகளே அந்தந்த மாகாணங்களின் மொழிகளாக முதன்மைப் பெற்றிருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார்.
பொதுவாக இந்நாட்டில் ஆங்கிலம் கற்றோரெல்லாம் சுய பாஷாபிமானம் என்பது
குன்றியிருப்பது அன்றி அதன் நயமறியாது திட்டுவதை நினைக்கும் பொழுது நமக்கு வருத்த முண்டாகிறது (23:64) என்று பாரதி எழுதுகிறார்.
தாய்மொழியை மறந்து அன்னிய மொழிகளை ஏற்றுப் போற்றும் போக்கைப் பாரதி வெறுத்தார். அதேகணம் அவரவர் தங்கள் தாய்மொழியைப் புறக்கணிப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறார். வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ! போ!என்று பிறமொழி மோகமுற்று கற்பவர்களை விரட்டுகிறார்.
பாரதிதாசன் மொழிவழித் தேசியத்திற்கு அச்சாரமாகத் தன் கவிதைகளில் பின்வருமாறு வெளிப்படுத்தி நிற்கிறார். இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்னுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை யுண்டாகிடும்; வீரம் வரும்எனத் தமிழை வீரத்தின் உரமாக்குகிறார். இந்த வீரம் விடுதலைக்கு வித்திடும் என்பது பாரதிதாசனாரின் கருத்து.
பாரதி தமிழ் மீது பற்று கொண்டாலும் வடமொழியே தேசிய மொழியாக வேண்டும் எனும் கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். இந்தி பாஷைப் பயிற்சி நம்மவர்க்குத் தேவை என்பதற்கான காரணத்தைப் பாரதி.
இந்தியா பலவிதப் பிரிவுகள் உடையதாய் இருந்தபோதிலும் உண்மையிலேயே
ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வேவ்வேறு பாஷைகள் இருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும் (2002:110)என்கிறார்.
அந்தப் பொதுப் பாஷை இந்தி. இவ்வாறாக பாரதி இந்தியின் மீது அக்கறை கொண்டிருந்தாலும், பாரதிதாசன் நோக்கில் பாரதி ஒரு தமிழ்த் தொண்டனாகக் காட்சி தருகிறான். அதனைப் பாரதிதாசன்,
தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழனுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றம்
தூளாய்ப்போகும் தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ (1998:219)என்கிறார்.
மேற்குறித்த நிலைகளில் காணும்போது பின்வரும் கருத்துகளை இக்கட்டுரையின் வழி நிறுவ முடிகிறது.
1. பாரதி தன்னுடைய தேசிய விடுதலையை மொழி ஊடாக வெளிப்படுத்தும் போது இந்தி எனும் ஒரு பொது மொழியை முன்னிறுத்தி மற்ற மொழிகள் அதனுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்கிறார்.
2. பாரதிதாசனோ தமிழை மட்டுமே முன்னிலைப் படுத்தவேண்டும். முதலில் தாய்மொழியை முன்னிலைப் படுத்துங்கள் பிறகு தேசியம் பற்றிச் சிந்திக்கலாம் எனும் கருத்துடையவராகத் தென்படுகிறார்.
3. இரு கவிஞர்களின் ஒருமித்த கருத்து, கட்டாயமாக ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியைக் கற்றுக் கொண்டு பிறகு வேறு மொழிகளைக் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)