புலம் பெயர்ந்த புதுச்சேரித் தமிழர்கள்

ஏ. எழில்வசந்தன்
புதுச்சேரி தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரிலிருந்து 170கல் தொலைவில் உள்ள இடம். புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரும் ஆகும். ஏறக்குறைய இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாவகாமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் அருகாமையிலுள்ள ஏனாம் நகரும் கேரளத்தின் அருகேஉள்ள மாஹே நகரும் தெலுங்கு, மலையாள மொழிபேசும் மக்களைக் கொண்டு புதுவை மாநிலத்தின் அங்கங்களாக உள்ளன. இவற்றோடு தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகேயுள்ள காரைக்கால் பகுதியும் புதுவையுடன் அங்கம் வகிக்கிறது.
இப்படிப் பன்மொழி பேசும் பகுதிகளைத் தன் இணைப்பாகக் கொண்ட புதுவை பிரெஞ்சுக் காலனியத்தின் போழ்து தனது காலனி நாடுகளுக்கு வேலையாட்களை கூலிகளாக அனுப்பி வைத்தது. அப்படி கூலியாட்களாகச் சென்றவர்களில் பலர் அந்தந்த நாடுகளில் தங்கியும் ஒருசிலர் தாயகம் திரும்பியும் தங்களது தொடர்பை வைத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரென்சுக்காரர்களின் காலனி ஆதிக்கத்தில் புதுவையில் இருந்து சென்றவர்கள் ஏராளமானோர் ஆகும்.
புதுச்சேரியில் பிரான்சு வாழ் தமிழர்களையும், புலம் பெயர்ந்து தாயகம் திரும்பிய பிரெஞ்சுத் தமிழர்களையும் சொல்தாக்கள் எனும் சொல்லால் அழைக்கின்றனர். சொல்தாக்களிடம் நேர்கண்டு உரையாடியும், சில குறிப்புகளின் அடிப்படையிலும் அமைவதே இக்கட்டுரை.பிரெஞ்சுக் காலனியமும் தமிழர்கள் புலப்பெயர்வும் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே டச்சுக்காரர்களும் டேனிஷ்காரர்களும் புதுச்சேரிப் பகுதியில் தம் வணிக வளாகத்தை நிறுவி உள்ளதை அறிய முடிகின்றது. புதுச்சேரிக்கு முதன்முதலில் வந்து வணிகம் செய்தவர்கள் போர்ச்சுக்கீசியர் ஆவர். இவர்களுக்குப் பின் 1616இல் டச்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வந்தனர். இவர்களை அடுத்துப் புதுச்சேரியில் வணிக வளாகம் அமைத்தோர் டேனிஷ்காரர்கள் ஆவார். 1656 வாக்கில் டேனிஷ்காரர்கள் புதுச்சேரியை விட்டு வெளியேற மீண்டும் டச்சுக்காரர்கள் 1664 முதல் 1670 வரை புதுச்சேரியில் தங்கினர். ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு மேல் புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. கி.பி. 1673ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் நாள் பெல்லான் ஷே என்ற பிரெஞ்சு வணிகன் புதுவையில் காலடி வைத்தான்.பிரான்சு நாட்டு மன்னர் 14ஆம் லூயி 01.09.1664ஆம் நாள் ராயல் கம்பெனி எனும் பெயரில் ஒரு வணிகக் குழுமத்தை ஏற்படுத்தினார். இதனோடு இதற்கு முன்பு இருந்த குழுமமும் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம் பிரெஞ்சு வணிகக் கழகம் பெரிய அளவில் வணிகத்தை நடத்தத் திட்டமிடப் பெற்றது. இந்தியாவிலும் பிரெஞ்சு வணிகக் கழகம் தமது வணிகத் தளங்களை அமைத்தது.
இந்தியாவில் சூரத் நகரில் அமைக்கப் பட்டிருந்த பிரெஞ்சிந்திய வணிகக் கழகத்திற்கு முகலாய மன்னர் ஒளரங்கசீப் தமது ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் ஆணை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த ஆணை பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் நிரந்தரமாய்த் தங்கி வணிகம் செய்ய அனுமதி தந்திருந்தது. இதன்படி சூரத் நகரில் ஒரு செயலகத்தை ஏற்படுத்திக் கொண்டனர். பிரெஞ்சு வணிகக் கழகத்தினர் தம் நாட்டிலிருந்து கொண்டு வரும் பொருள்களுக்குச் சூரத் நகரில் ஒருமுறை சுங்கத் தீர்வைச் செலுத்துதல் வேண்டும். செலுத்திய பிறகு அப்பொருளை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விற்கும் உரிமையைப் பெற்றனர். இதேபோல் இந்தியாவில் பொருள்களை வாங்கித் தம் நாட்டிற்குக் கொண்டு செல்லும் உரிமையையும் பெற்றனர். 1670இல் புதுச்சேரியில் வணிக வளாகம் அமைக்கலாம் என்று ழான்பெப்பேன் (மூeழிஐ
(Jean Pepein) தலைமையில் அமைக்கப்பெற்ற குழு அறிக்கை அனுப்பியது. இதன்படி 04.02.1673 அன்று தெலாஹே என்ற கப்பல் தலைவனின் நம்பிக்கைக்குரிய துணைப்படைத்தலைவன் பெலான்ழே தெ லெஸ்ப்பினேவும் காவல் தலைவரும் புதுச்சேரிக்கு வந்து இறங்கினர். இந்நாளே புதுச்சேரி வரலாற்றில் பிரெஞ்சியர் ஆட்சியின் தொடக்க நாளாக அமைந்தது. 14.01.1674 அன்று பெலான்ழேவின் உதவியாளராகப் பிரான்சுவா மர்த்தேன் புதுச்சேரிக்கு வந்தார். பெலான்ழே பிரான்சுக்குத் திரும்பிய பின்னர் 06.05.1675இல் மர்த்தேன் புதுச்சேரியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பின்னர் 1681இல் சூரத் நகருக்குச் செல்ல மர்த்தேன் பணிக்கப் பெற்றார்.
1686ஆம் ஆண்டில் இயக்குநர் தலைவராகப்(Director General) புதுச்சேரிக்குத் திரும்பினார். இடையில் நிகழ்ந்த அரசியல் போட்டிகள் போர்கள் காரணமாகப் புதுச்சேரியை இழந்தும் சிறைப்பட்டும் மீண்ட மர்த்தேன் புதுச்சேரியை மீண்டும் பெற்று 1706-இல் புதிய கோட்டை ஒன்றைக் கட்டி முடித்தார். இதன் பின்னர்ப் புதுச்சேரி குறிப்பிடத் தக்க பிரெஞ்சுக் குடியிருப்பு நகரமாக மாறியது. பிரான்சுவா மர்த்தேன் சென்னையில் இருந்த கத்தோலிக்கத் துறவி கரோன் என்பவரின் ஆலோசனைப்படி பூந்தமல்லி தானப்ப முதலியாரைத் தரகராக நியமித்துக் கொண்டார் என்று ஞானுதியாகு(1965) குறிப்பிட்டுள்ளார். தானப்ப முதலியார் வணிகக் கழகத்திற்கும் வணிகர்க்கும் இடையே தரகராய் அமைந்து வணிகம் செழித்தோங்க வழிவகை செய்துள்ளார். தானப்ப முதலியார், வணிகத்தை மேன்மேலும் வளர்ப்பதற்காக உள்நாட்டு வணிகர்களையும் நெசவாளர் களையும் பொது ஊழியர்களையும் புதுச்சேரிக்கு வர வழைத்தார். இவர்கள் புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த வணிகர்களோடும் நெசவாளர்களோடும் இணைந்து பணி யாற்றினர். வெளியூரிலிருந்து வந்தோர் வசதிக்குத் தக்கவாறு வீடுகளைக் கட்டிக் கொள்ள அவர் ஏற்பாடுசெய்தார். இதனால் பிராமணர், வேளாளர் முதலிய சாதியினரும் குடியேறினர்.(சிலம்பு நா.செல்வராசு:2007), என்றும், வணிக நோக்கில் இந்தியாவிற்கு வந்த பிரெஞ்சுக்காரர்கள் தமிழ்ப் பகுதிகளை காலனி நாடுகளாக மாற்றிய பிறகு, தமிழரைத் தாம் பிறந்த தாயகத்தை விட்டுப் பலவேறு நாடுகளுக்கு அடிமைகளாகக் குடியேற்றினர்(க.ப.அறவாணன்:2001) என்றும் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய வரலாற்றுப் பின்புலம் ஒருபுறம் இருக்க. இனிவரும் கட்டுரை புதுவையிலிருந்து சென்று பிரான்ஸ் நாட்டில் சில காலம் தங்கி பணியாற்றி விட்டு மீண்டும் புலம் பெயர்ந்து புதுவையில் வந்து தங்கி பிரான்ஸிற்கும் புதுவைக்குமிடையேயான ஒட்டுறவை வைத்துக்கொண்டுள்ள சொல்தாக்கள் எனும் குடிகளிடம் கண்ட நேர்காணலும் அவர்கள் அதற்கிறுத்த பதில்களும் வரிசைப்படுத்தப்பட்டுச் செல்லும்.
நேர்கானலில் கிடைக்கப்பெற்ற தரவுகள்
1. புதுச்சேரியில் இருந்து பெரும்பான்மையோர் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டே புலம் பெயர்ந்துள்ளனர். மிகச்சிலரே பதினான்கு, பதினாறு வயதில் சென்றுள்ளனர். தாத்தா வழியில் சிலரும் தந்தை வழிச் சிலரும் பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். தாத்த வழிப் பிரெஞ்சுக் குடியுரிமைப் பெற்றோர் முதல் உலகப் போரின்போது பிரெஞ்சு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததின் பேரில் சென்றுள்ளனர்.
2. பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெறுவதற்கான முதன்மையான காரணம் வேலைவாய்ப்பு ஆகும். வேலைவாய்ப்பினால் கிடைக்கக் கூடிய கைநிறைய ஊதியமும் அதனால் வருகின்ற ஒளிமயமான எதிர்காலம். இக்காரணங்களினால் இந்தியாவில் வங்கி மேலாளராகப் பணிபுரிபவர்கூட தனது வேலையை விட்டு நீங்கி பிரான்ஸிற்குச் செல்ல ஆசைப்படுகிறார். குறைந்தது வாரம் 35 மணிநேரம் வேலை செய்தால் கூட 100 யுரோ பணம் பெறமுடியும். இவற்றோடு அரசு தரும் சலுகைத் தொகைப் போன்ற காரணங்களால் பிரெஞ்சுக் குடியுரிமைப் பெற பலர் விருப்பப்படுகின்றனர்.
3. பிரெஞ்சுக் குடியுரிமைப் பெறுவதற்கு மாதமாற்றம் செய்யத் தேவையில்லை மொழியை மட்டுமே அவர்கள் தகுதியாக நினைக்கிறார்கள். பிரெஞ்சு மொழி நன்றாகப் பேசத் தெரிந்தால் போகுதம் குடியுரிமைப் பெறுவது எளிது. அதுவே தகுதி.
4. பிரெஞ்சுக் குடிமக்களுக்கும் பிரெஞ்சிந்திய குடிமக்களுக்குமிடையே வேற்றுமை இருக்கிறது, இனவெறி இருக்கிறது. அரசாங்கம் எந்தவித பாகுபாடும் காட்டாமல் ஓட்டளிப்பு, கல்வி போன்றவற்றில் சமத்துவத்தையும், சமஉரிமையையும் கொடுத்துள்ளது. பிரெஞ்சு சமூகம் திறமைசாலிகளையும், அறிஞர்களையும் மதிப்பளிக்கும் சமூகம். ஊழல்கள் மிகச் சிலவே உள்ள இந்த பிரெஞ்சு நாட்டில் 1960ற்கு முன்பெல்லாம் கறுப்பர் உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளாக வரவே முடியாது. ஆனால், இன்றைய நிலை முற்றிலும் மாறி உள்ளது. நம் தமிழர்கள் கூட மிக உயர்ந்த அதிகாரப் பதிவிகளில் உள்ளனர்.
5. பிரான்ஸ் நாட்டில் பெரும்பாலானோர் ரோமன் கத்தேலிகர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது தாத்தா அல்லது தந்தை வழியிலேயே, அதாவது இரண்டு தலைமுறைக்கு முற்பட்டிருந்தே இந்து சமயத்திலிருந்து கிறித்துவ சமயத்திற்கு மாறியவர்கள், குழந்தை பிறக்கும் போது பெரிய விழா எடுத்து பெயர் சூட்டுவதும், இறந்தபின் அமைதியாக ஊர்வலம் சென்று கல்லறையில் புதைப்பதும் பிரான்ஸ் நாட்டு மதச் சடங்காகவும், இங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் பலரின் மாதச் சடங்குகளாலாகவும் உள்ளன.
6. தமிழர்கள் எங்கு சென்றாலும் தங்களது காலாச்சாரத்தை விடவில்லை. அதேபோன்று தங்களது சாதியையும் விட மறுக்கின்றனர். பிரான்ஸ் வாழ் தமிழர்களே தங்களது சாதிகளுக்குள்ளாகவே பெண் கொடுத்தல், எடுத்தல் கொள்கின்றனர். முற்காலத்தில் பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெறவேண்டு மென்றாலே தங்களுது சாதிய பழக்கவழக்கங்களை விட்டுவிட வேண்டும். ஆனால், இப்போது அந்த நடைமுறையும் கெடுபிடியும் இல்லை.
7. பிரெஞ்சுப் பெயர்களில் குடும்பப் பெயர் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். முன்பெல்லாம் பிரெஞ்சுக் குடியுரிமைப் பெறப் போகும்போது. தமிழர்கள் தங்களுக்கான பிரெஞ்சுக் குடும்பப் பெயரினை தூதரக அதிகாரிகளிடம் கோருவர். பிரெஞ்சு மொழியறிவு இல்லாத இவர்களிடம் அவ் அதிகாரிகள் குடும்பப் பெயர்களாக, ஆலே செருப்பு, ­மிஸ் சட்டை, சம்தி சனிக்கிழமை, திமாஸ் நோ என்னும் பெயர்களை வேண்டுமென்றே இழிவுபடுத்திச் சூட்டிவிடுவார்கள் அப்படிச் சுட்டப்பட்ட குடும்பப் பெயர்கள் இன்னும் வழி வழியாகத் தொடர்கின்றன. ஆயினும் பலர் கிறித்துவராக இருந்தாலும் தமிழர்கள் தமிழ்ப் பெயர்களையே தங்களுது குடும்பப் பெயர்களாகக் கொண்டு விளங்குகின்றனர்.சான்றாக, ஒருவரின் பெயர், பெரிய நாயகி சாமி. அவர் தன்னுடைய முன்னொட்டாகிய பெரியா என்பதை குடும்பப் பெயராகவும் சாமி என்பதை தன்னுடைய பெயராகவும் வைத்துக் கொண்டுள்ளார். அவர் வழி வந்தோர்களின் பெயரின் முன்னொட்டெல்லாம் பெரியா என்றே வழங்கப் பெறும். பெண் திருமணமாவதற்கு முன் தன் குடும்பப் பெயரையும் திருமணம் ஆனபின் தன் கணவரின் குடும்பப் பெயரையும் வைத்துக் கொள்ளலாம். ஒருசிலர் இரண்டு குடும்பப் பெயர்களையும் இணைத்துக் கொள்வர்.
8. திருமணம் செய்ய இருக்கும் பெண் அன்புடையவளாக இருக்கின்றாள என்பதைப் பார்க்கின்றனர். ஆயினும் தமிழர்கள் பெண் வீட்டாரிடமிருந்து வரதட்சணை வாங்குவதை இங்கும் விடவில்லை. பெரும்பாலும் தமிழர்களின் திருமணம் தங்களது கலாச்சாரத்தை ஒட்டியே நிகழ்த்தப் பெறுகின்றது. பிரெஞ்சுக் கலாச்சாரத்தைப் போன்றே திருமணம் முடிந்த பிறகு பார்ட்டி கொடுக்கும் வழக்கம் உள்ளது.
9. பெரும்பான்மையான தமிழர்கள் இரண்டாம் உலகப்போரின் போதே குடியேற்றப்பட்டனர். இன்றைய நிலையில் தமிழர்கள் தங்களது படிப்பு, திறமைக்கு ஏற்ப நல்ல பணியினைப் பெற்று உயர்ந்த நிலையில் உள்ளனர். பிரெஞ்சு மக்களால் நம்மக்களுக்கு எவ்விதத் தொந்தரவும் கிடையாது மாறாக நம் தமிழர்கள் பிரெஞ்சுக் காரர்களின் கலாச்சாரத்தில் தலையீடு செய்யும் போதுதான் பிரச்சனை ஆரம்பம் ஆகின்றது.
10.பிரெஞ்சுப் பண்பாடு தமிழர் பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கமாக ஆடம்பரமான திருமணம், ஆடம்பரத்திற்காகச் செலவு செய்தல் போன்றவைகளாகும்.
11. பிரான்ஸ் நாட்டில் கிரிக்கெட் கிடையாது. இந்நாட்டின் தென்பகுதியில் மர்சை எனும் ஒரு பகுதி உள்ளது. அங்குதான் இந்த பெத்தாங்கு விளையாட்டை விளையாட ஆரம்பித்தனர். ஒரு குழுவிற்கு இரண்டுபேர் வீதம் ஒன்றிற்கு மேற்பட்ட குழுக்கள் இணைந்து விளையாடும் ஆட்டம் இது. இவ்வாட்டத்தின் ஆடுபொருளாக இரும்புக் கோலிகள் இடம் பெறுகின்றன. பணியிலிருந்து ஓய்வு செய்ய வயதானோர் பொழுதுபோக்கிற்காக விளையாடப்படும் ஆட்டம் இது. புதுவையில் பெத்தாக்கு தவிர்த்து பிரெஞ்சுக்காரர்கள் விட்டுச் சென்ற விளையாட்டுகள் வேறு ஏதும் இல்லை.
12. பிரான்ஸ் நாட்டில் சொல்தா என்றால் வீரன் என்று பொருள். இச்சொல்லால் பிரான்ஸ் நாட்டில் கூப்பிட்டால் பெருமை என்றும் அதுவே புதுச்சேரியில் கூப்பிட்டால் இழிவாகவும் நினைக்கிறார்கள். ஏனென்றால் சொல்தா என்பது அடிமட்ட வீரனை (அ) பொதுவாக இராணுவத்தில் பணியாற்றி திரும்பியவரைக் குறிக்கும் சொல்லாகும். சொல்தா விற்கு அடுத்த பதவி கப்ரால் என்பதாகும். இராணுவத்தில் 15 வருடம் முடிந்து வீடு திரும்பியவரை சொல்தா என அழைக்கின்றனர்.நிறைவாக,பிரெஞ்சு ஆட்சியின் போது கூலிகளாகச் சென்ற புதுவை வாழ்த் தமிழர்கள் நாளடைவில் பிரான்ஸிற்குச் செல்வதையும், அங்கு பணிபுரிந்து விட்டு வருவதையும் பெருமையாக நினைத்தனர்; நினைக்கின்றனர். அது இன்றளவும் தொடர்கின்றது. பிரான்ஸ் சென்று திரும்பியவர்களை இவ்வூர் மக்கள் சொல்தா என்று அழைக்கின்றனர். இம்மக்களைப் பொறுத்தவரை சொல்தா என்றால் பெரும் பணக்காரன் கண்மூடித்தனமாகச் செலவு செய்பவன் என்பதாகும்.இன்றைய நிலையில் பிரெஞ்சு குடியுரிமைப் பெறுவதற்கு புதுவையில் பல இலட்சங்கள் வரைப் புரளுகின்றன. உயர்சாதி மக்கள்கூட குடியுரிமை பெற்ற தாழ்சாதி பெண்ணை பணம் கொடுத்து திருமணம் செய்து கொள்ள முன் வருகின்றனர். காரணம், பணப்புழக்கமும், பிரான்ஸ் சென்று வந்தால் பெறக்கூடிய சமூக அந்தஸ்துஅம. இது புதுவையைப் பொறுத்தவரை ஒரு வணிகமாகவே நடக்கிறது.எது எப்படியோ, தமிழர்கள் தங்களின் சமூக அடையாளத்தை இழக்காது உலக அரங்கில் உயர்ந்தால் அதுவே நமக்குப் பெருமை. மேற்கண்ட நேர்கானல் வழி அதனையே அறிந்துகொள்ள முடிகிறது.
பயன்பட்ட நூல்கள்
1. அறவாணன், க.ப., தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? தமிழ்க்கோட்டம், 11, இரண்டாம் தெரு, மோகன் நகர், புதுச்சேரி 05.
2. செல்வராசு, சிலம்பு நா. ஆனந்தரங்கப்பிள்ளை, சாகித்திய அகதெமி, நியுடெல்லி (அச்சில் உள்ள புத்தகம்).
பயன்பட்ட இணைய முகவரி
தகவலாளி
Mr. Perthieves, Airport Engineerring Manager, France, (Working period 1952 to 1984)

Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)